Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM

தூத்துக்குடியில் தீவிர முன்னேற்பாடுகள்

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

`புரெவி’ புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தூத்துக்குடி வந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தலா 40 பேர் வந்துள்ளனர். இவர்கள்மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்படுவர்.

அவசர ஆலோசனை

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புயல், வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான குமார் ஜெயந்த் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், சார்ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அனைத்து துறைஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படகுகள் கரை திரும்பின

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் குமார் ஜெயந்த் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்கள், உணவு, குடிநீர், மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியை சேர்ந்த 72 படகுகள் கடலுக்கு சென்ற நிலையில் 64 படகுகள் ஏற்கெனவே கரை திரும்பிவிட்டன. 8 படகுகள் திருச்செந்தூரை தாண்டி தூத்துக்குடி அருகே வந்துவிட்டன. இரவுக்குள் அவை கரைக்கு வந்துவிடும் என்றார்.

63 நிவாரண முகாம்கள்

ஆட்சியர் செந்தில் ராஜ் கூறும்போது, ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 36 இடங்களிலும் அதிகாரிகள் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 63 நிவாரண முகாம்களில் குடிநீர், உணவு, ஜெனரேட்டர், டார்ச் லைட், பாய்,தலையணை போன்ற அனைத்துவசதிகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 637 குளங்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். உடைப்பு ஏற்பட்டால் உடனே சரி செய்ய 30 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய இன்று சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மீட்புக் குழுவினர்

எஸ்பி ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் பயிற்சி பெற்ற 130 காவலர்கள் உள்ளனர். இவர்கள் 6 பிரிவுகளாக மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படுவார்கள். இவர்களிடம் 24 வகையான மீட்பு உபகரணங்கள் உள்ளன. உள்ளூர் போலீஸார் 1,200 பேரும் தயார் நிலையில் உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x