Published : 01 Dec 2020 03:16 AM
Last Updated : 01 Dec 2020 03:16 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள்குறைதீர் நாள் கூட்டம் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பொதுமக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் இருந்து ஆட்சியரிடம் குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டுவந்து மனுக்களை அளித்தனர்.
இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர் கே.எஸ்.ராகவேந்திரா தலைமையில் இந்து முன்னணியினர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: சமீபத்தில் கந்த சஷ்டி கவசத்தை இழிவாகப் பேசியும், இந்து தெய்வங்களை அவதூறாக சித்தரித்தும் சிலர்கருத்து வெளியிட்டனர். அதற்குயாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கந்தசஷ்டிகவசத்துக்கு ஆதரவாக வேல் யாத்திரை நடைபெறுகிறது. இந்தயாத்திரைக்கு அனுமதி அளிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கக் கூடாது
தூத்துக்குடி மாவட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் அளித்தமனுவில், ‘பாஜக நடத்தும் வேல்யாத்திரை சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாகவும், சகோதர தன்மையை குலைக்கும் விதமாகவும், மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும் அமைந்துவிடக்கூடாது. ஆகையால் வேல் யாத்திரையை தூத்துக்குடி மாவட்டத்துக்குள் அனுமதிக்கக்கூடாது’ எனக் குறிப்பட்டிருந்த னர்.
தெருவிளக்கு
தூத்துக்குடி அருகேயுள்ள தங்கம்மாள்புரம் திமுக கிளைச் செயலாளர் பால்ராஜ் அளித்த மனுவில், ‘எங்கள் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிதாக சாலை அமைக்க வேண்டும். பழுதான மின் கம்பங்கள் மற்றும் தெரு விளக்குகளை சரி செய்து, புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.தூத்துக்குடி தேவர் காலனி, நேதாஜிநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘தூத்துக்குடி மாநகராட்சி தேவர் காலனி, நேதாஜிநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
சாலை வசதி ஏற்படுத்தஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர்.
8 மாதங்களுக்கு பிறகு குறைதீர் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கடைசியாக கடந்த மார்ச் 17-ம் தேதி நடத்தப்பட்டது. 8 மாதங் களுக்கு பிறகு நேற்று காணொலி காட்சி வாயிலாக முதலாவது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில் ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்ட அனைத்து துறை தலைமை அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து மனு அளித்ததுடன் குறைகளையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். கரோனா ஊரடங்கு முடியும் வரை வாரம் தோறும் திங்கள்கிழமை காணொலி காட்சி வாயிலாக குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT