Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
நிவர் புயல் காரணாக காஞ்சி, செங்கை, வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், பாலாற்றில் 20 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமார் 42 ஆயிரம்கனஅடி வரை வெள்ள உபரிநீர்பாலாற்றில் வெளியேற்றப்படுகிறது.
நிவர் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது. இதனால் தண்டரை அணைக்கட்டில் இருந்து சுமார் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் செய்யாற்றின் இடது கரையில் உள்ள பெருநகர், அனுமந்தண்டலம், மேல்பாக்கம், சிலாம்பாக்கம், கருவேப்பம்பூண்டி, கடம்பர் கோயில், இரு மரம், செம்பரம், நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புள்ளம்பாக்கம், திருமுக்கூடல் ஆகிய கிராமங்களுக்கும், வலது கரையில் உள்ள மாகரல், காவாந்தண்டலம், இளையனார்வேலூர், சித்தாத்தூர், கம்பராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வயலாத்தூர், புதுப்பாளையம், உக்கல், ஆக்கூர், கீழ்நத்தம்பாக்கம் ஆகியபகுகி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் செய்யாற்றில் இறங்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது. கால்நடைகளையும் ஆற்றில் இறங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் பொதுப்பணித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தென்னேரி நிரம்பி உபரிநீர் நீஞ்சல் மடு வழியாக வெளியேறுவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அகரம், கட்டவாக்கம், விளாகம், அளவூர், வாரணவாசி, தாழையாம்பட்டு, தேவரியாம்பாக்கம், தொள்ளாழி, தோனாங்குளம் ஆகிய கிராமங்களுக்கும், உள்ளிட்ட பகுதிகளுக்கும் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆற்றில் கடக்கவோ, குளிக்கவோ இறங்க வேண்டாம் எனவும், கால்நடைகளை ஆற்றில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும், சிறுவர் சிறுமியர் ஆற்றின் அருகே செல்லாமல் இருக்கவும் பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என இரு மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளன.
மேலும் 2 மாவட்ட காவல் துறையும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT