Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தானியங்களை மீள் கொணர்தல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் வே.சாந்தா. முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சி.பொன்னையன் கூறியது:
அண்மைக்காலமாக, சிறுதானியங்களுக்கான தேவை அதிகரித்து அதற்கான சந்தை விரிவடைந்து வருகிறது. இதற்கு காரணம் சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள், மருத்துவ குணங்கள் மனிதர்களுக்கு வருகின்ற வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைக் குணப்படுத்தவல்லது. இதன்காரணமாக சிறுதானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகிறது. இதுதவிர, சிறுதானியங்கள் மற்ற பயிர்களை ஒப்பிடுகையில் குறைந்த செலவு, குறைந்த தண்ணீர் மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுக்கின்றன. எனவே, சிறுதானிய உற்பத்தியை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு சிறுதானிய உற்பத்தித் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காட்சியை பொன்னையன் பார்வையிட்டு, சிறுதானிய உற்பத்தி கையேட்டை வெளியிட்டார்.
ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT