Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM
பிஏபி நீர் பங்கீட்டில் பொறியாளர்கள் உரிய பதிலளிக்க வலியுறுத்தி, திருப்பூர் ஆட்சியரிடம் காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளைச் சேர்ந்த கடைமடை விவசாயிகள் நேற்று முறையிட்டனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் (பிஏபி) மூலமாக, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர்நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. அதேசமயம், அதன் ஒரு பகுதியான பி.ஏ.பி.-யின் கடைமடையான வெள்ளகோவில் பகுதிக்கு நீர் கிடைப்பதில்லை. 2006-ம் ஆண்டு பாசனப் பகுதி விரிவாக்கத்துக்கு பிறகு, உரிய முறையில் நீர் விநியோகம் இல்லை. தென்னை, நெல், சோளம், பருத்தி, புகையிலை என பல்வேறு விவசாயமும் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு ஆடு, மாடுகளுக்கான தண்ணீர் சேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.
48 ஆயிரம் ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுகமாக 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். பி.ஏ.பி. சட்ட விதிகளின்படி 7 நாள் பாசனம், 7 நாள் அடைப்பு என மாதத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர் விட வேண்டும். ஆனால், வெறும் 3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் கொடுத்து, எஞ்சியுள்ள 28 நாட்கள் அடைக்கப்படுகிறது. இதனால் கடைமடைக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காமல் கருகும் பகுதிகளும் உண்டு என விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
50 சதவீத தண்ணீர் மாயம்
பிஏபி நீர் விநியோகம் செய்த விவரங்களை பிஏபி பொறியாளர்களிடம் கேட்டால் அலைக்கழிக்கின்றனர். விவசாயிகள் கருத்துகேட்பு் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துஎங்களை அழைத்திருந்தார். ஆனால் திடீரென்று கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர். நீர் பாசனத் தகவல்களை அளிக்கவும் மறுத்துவிட்டனர்.
விவசாயிகளை அதிகாரிகள் இப்படி நடத்தியது எங்களை மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆட்சியர் உத்தரவிட்ட பின்பு, எங்களுக்கு எந்த தகவலும் அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கவில்லை. எங்களுடைய பங்கில் 50 சதவீத தண்ணீர் மட்டுமே நாங்கள் பெறுகிறோம். ஆனால் பிஏபி நிர்வாகம், 100 சதவீத பங்கை அணையில் இருந்து எடுக்கிறது. எங்கள் தண்ணீர் எங்கே செல்கிறது? விவசாயிகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக இரண்டொரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT