Published : 25 Nov 2020 03:16 AM
Last Updated : 25 Nov 2020 03:16 AM

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஓராண்டுக்கு பிறகு 5-வது அலகு இயங்கியது 3 அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின் உற்பத்தி

தூத்துக்குடி

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஓராண்டுக்கு முன் பழுதான 5-வது அலகு சரி செய்யப்பட்டு, மீண்டும் செயல்படத் தொடங்கியது. தற்போது 3 அலகுகள் மூலம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

5-வது அலகில் கடந்த ஆண்டுநவம்பர் மாதம் பழுது ஏற்பட்டது. கரோனா ஊரடங்கால் உதிரிப்பாகங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பழுதை சரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த ஓராண்டாக 5-வது அலகு செயல்படாமல் நிறுத்தப்பட்டது. தற்போது உதிரிபாகங்கள் வரப்பெற்று பழுது சரி செய்யப்பட்டதையடுத்து 5-வது அலகு ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

இதேநேரத்தில் 1-வது அலகு ஆண்டு பராமரிப்புக்காக 35 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மின் தேவை குறைவு காரணமாக 2-வது அலகிலும் மின் உற்பத்தி செய்யப்படவில்லை. தற்போது 3, 4 மற்றும் 5-வது அலகுகள் செயல்படுகின்றன. இவற்றின்மூலம் சராசரியாக 630 மெகாவாட்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனல்மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x