Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்ய மீனவர்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த விசைப்படகு தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த மீனவர்கள். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரி மீனவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கத்தினர், அதன் தலைவர் வெலிங்டன் தலைமையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்களுக்கான ஆபத்து கால ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவ உதவி மையம் அமைக்க வேண்டும். மீன்பிடித் துறைமுகத்தில் பணிகள் அதிகாலை வரை நடைபெறும் என்பதால் வெளியே உள்ள உணவகங்களை அதிகாலை 1 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும்.

மீனவர்கள் தங்கி ஓய் வெடுக்கவும், உடமைகளை பாதுகாப்பாக வைக்கவும் ஓய்வு கூடம் அமைத்து தரவேண்டும். மீனவர்களுக்கு ஆபத்துகால அவசர தொலைதொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகுண்டம் அருகே உள்ள நாட்டார்குளத்தைச் சேர்ந்த அ.முத்துலெட்சுமி (40), தனது குடும்பத்தினருடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு:

எனது கணவர் அந்தோணி என்ற துரைராஜ் கடந்த 13.11.2020 அன்று விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இறந்துவிட்டார். கணவரின் வருமானத்தில் வாழ்ந்து வந்த நாங்கள் தற்போது மிகவும் கஷ்டத்தில் உள்ளோம். எனது மூத்த மகள் சுகன்யா 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு கருணை அடிப்படையில் ஏதாவதுஅரசு வேலை வழங்கினால் எங்கள்குடும்பம் வறுமையின்றி வாழ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு உதவி

தூத்துக்குடி மாவட்டம் வர்த்தகரெட்டிப்பட்டியை சேர்ந்த அமமுக பிரமுகர் எம்.பண்டாரம் என்ற மணி அளித்த மனு விவரம்:

ஏரல் அருகேயுள்ள சம்படி கிராமத்தில் கடந்த 10.9.2020 அன்று பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஏற்கெனவே தந்தை இல்லாத அக்குழந்தைகள் தற்போது தாயையும் இழந்துள்ளதால் அவர்களது எதிர்காலம் கருதி தலா ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கல்குவாரி

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘எங்களது கிராமத்தில் பொதுமக்கள் குடியிருப்பு அருகே கல் குவாரி மற்றும் கிரஷர் அமைக்கப்படவுள்ளதாக அறிகிறோம். இந்த குவாரி அமைத்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். கிராம மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் கேள்விக் குறியாகும். எனவே, கல்குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x