Published : 23 Nov 2020 03:13 AM
Last Updated : 23 Nov 2020 03:13 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஒரே நாளில் 12,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் பணி வரும் 20.01.2021 வரை நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், திருத்தம் போன்றவைகளுக்கு 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதல்நாள் சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,603 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
18 வயது நிரம்பிய அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த சிறப்பு முகாமை தவறவிட்டவர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் படிவங்களை பெற்றும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தம் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 12,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றார்.
மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜித் சிங் கலோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
நீர் நிலைகள் தீவிர கண்காணிப்பு
வடகிழக்கு பருவமழை ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்புள்ளதாக 36 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு பல்வேறு துறை அதிகாரிகளை கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகர பகுதியில் மட்டும் 20 இடங்கள் தயாராக உள்ளன. இந்த இடங்களில் ஜெனரேட்டர் வசதி, போதிய கழிப்றை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அருகேயுள்ள நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் முதல் பெரிய குளங்கள், ஏரிகள் அனைத்தையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கரைகளில் உடைப்பு ஏதேனும் உள்ளதா, நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என தினமும் ஆய்வு நடத்தப்படுகிறது. கோரம்பள்ளம் குளத்தின் நீர் வெளியேற்றம், நீர்வரத்து போன்றவை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 7 வார்டு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக 90 மின் மோட்டார்கள் 24 மணிநேரமும் இயங்கி வருகின்றன. கனமழை பெய்தாலும் அதனை சந்திக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT