Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர்- ராஜபாளையம் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சாலையோரத்தில் ஏராளமான புதிய ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தன.
நேற்று காலை அந்தப் பகுதியில் குப்பை அள்ளுவதற்காக சென்ற ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் இதைப் பார்த்துள்ளனர்.
அங்கு கிடந்த சுமார் 50 ஆதார் அட்டைகளை அவர்கள் சேகரித்து மாப்பிளையூரணி ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆதார் அட்டைகள் எப்படி அங்கு வந்தன என்பது தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி அஞ்சல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் 22-ம் தேதிதூத்துக்குடி மேலூர் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தாளமுத்துநகர் அருகேயுள்ள ஆரோக்கியபுரம் அஞ்சல் அலுவலகத்துக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தபால் பை கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.
இது தொடர்பாக அஞ்சல் துறை சார்பில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்யப் பட்டு, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையோரம் கிடந்த ஆதார் அட்டைகள், காணாமல் போன அந்த தபால் பையில் இருந்தவையா என்பது குறித்து அஞ்சல்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.
ஆனால், அந்த ஆதார்அட்டை கவர்களில் பழைய தேதியில் அஞ்சல்துறை சீல்கள் இருந்தன. இதனால் அவை காணாமல் போன தபால் பையில் இருந்தவை அல்ல என்பது தெரியவந்தது.
ஆதார் அட்டைகளை மீட்ட அஞ்சல் துறையினர், அவற்றில் உள்ள முகவரியை வைத்து உரியவர்களிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும், இந்த ஆதார் அட்டைகள் எப்படி அங்கு வந்தன, தபால்காரர் கள் யாராவது அஜாக்கிரதையாக விட்டுச் சென்றனரா என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT