Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM
வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திமுக கட்சி காணாமல் போய் விடும், அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ஆருடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா ஆட்சிக்கு பிறகு ராசி யான முதல்வராக பழனிசாமி பணியாற்றி வருகிறார். கரிகால சோழனை நேரில் கண்டது போல நீர் மேலாண்மை திட்டத்தை செயல் படுத்தி வருகிறார்.
இதனால், நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடமும், மாவட்ட அளவில் வேலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இதுவரை, வேலூர் மாவட்டத்தில் 56 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
19.50 கிலோமீட்டர் நீளத்துக்கு நீர்வரத்துக் கால்வாய்கள் தூர் வாரப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள 101 ஏரிகளில் 67 ஏரிகள் ரூ.19 கோடியே 77 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டுள்ளன. மோர்தானா கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் தொகுதிகளையும் சேர்த்து 234 தொகுதிகளிலும் வளர்ச்சி திட்டப் பணிகளை முதலமைச்சர் பழனிசாமி செய்து வருகிறார். எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ள அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த பகுதியில் ரூ.5 கோடியில் அணை கட்டப் பட்டுள்ளது.
காட்பாடி தொகுதியில் வட்டார மருத்துவமனை அமைக்க 5 ஏக்கர்நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மருத் துவமனை அமைக்கப்படவுள்ளது. சத்துவாச்சாரி-பிரம்மபுரம் இடையே ரூ.30 கோடியில் மேம் பாலம் கட்டும் பணி தொடங்கப் படவுள்ளது. திமுகவினர் காழ்ப் புணர்ச்சியோடு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று (நேற்று முன்தினம்) காட்பாடியில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மோர்தானா பகுதியில் தூர்வார வேண்டும் என வலியுறுத்தி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை, மக்கள் நம்ப மாட்டார்கள். திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக பேசி வருகிறார். ஆனால், முதலமைச்சர் பழனிசாமி மக்களை நேரில் சந்தித்து குறைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.
வருகிற சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 13 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும், அதற்குப் பிறகு திமுக என்ற கட்சி இருக்காது.
வேலூரில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவர்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றி வருகின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT