Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழை இன்றுமுதல் பெறலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் இன்றுமுதல் (நவ.17) மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், "நிரந்தர பதிவெண் (PermanENt Register Number) கொண்டு தேர்வெழுதிய 10-ம் வகுப்பு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பர் மாத துணைத் தேர்வு எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத்தேர்வுக்கு முன்) எழுதிய தேர்வர்கள் தற்போது எழுதி இருப்பின், தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வர்களில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் பிளஸ் 1 (600 மதிப்பெண்), பிளஸ் 2 (600 மதிப்பெண்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2-வில் முழுமையாக தேர்ச்சி அடையாதவர்களுக்கு, இரண்டு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.

மேற்கண்ட தேர்வர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். பழைய நடைமுறையில் (மொத்தம் 1200 மதிப்பெண்) பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்குவது தொடர்பாக பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x