Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய பலத்தமழை நேற்று பகலிலும் தொடர்ந்தது. காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை சுமார் 4 மணி நேரம்கொட்டிய கனமழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையை பொருட்படுத்தாமல் சாலையில் நின்று கடமை உணர்வோடு பணியாற்றினார் தூத்துக்குடி போக்குவரத்து காவலர் முத்துராஜ்.
தூத்துக்குடி தென்பாகம் போக்குவரத்து பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும்இவர், நேற்று காலை தூத்துக்குடி விவிடி சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார். கனமழை பெய்து சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடிய போதிலும் முத்துராஜ் தொடர்ந்து சாலையில் நின்றவாறு வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி நகரின் மிக முக்கியமான, போக்குவரத்து நெரிசல்மிகுந்த இடமான விவிடி சந்திப்புபகுதியில் முத்துராஜ் கனமழையிலும் வாகனங்களை ஒழுங்குபடுத்திய காட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. மக்கள் பலரும் அவரது கடமை உணர்வைபாராட்டினர்.
இதனை அறிந்ததும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனடியாக முத்துராஜ் பணியாற்றிய விவிடி சந்திப்பு பகுதிக்கே சென்று அவருக்கு பரிசு வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT