Published : 16 Nov 2020 03:14 AM
Last Updated : 16 Nov 2020 03:14 AM

திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்து விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட வேளா ண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டாரங்களில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம்.

பிசான பருவத்தில் நெல் சாகுபடி செய்ய முக்கிய ரகங்களான ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5, டி.கே.எம்.13, கோ 51, பி.பி.டி.5204, ஆர்.என்.ஆர்.15046, என்.எல்.ஆர்.44408 ஆகிய சான்று பெற்ற விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் 200 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நெல் பயிர் சாகுபடி செய்யும் முன் பசுந்தாள் உரங்கள் விதைத்து பூக்கும் முன் மடக்கி உழுதும், விதைகளை நாற்றாங்காலில் விதைக்கும் முன் வேளாண்துறை மூலம் விநியோகம் செய்யப்படும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றின் மூலம் விதை நேர்த்தி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

திருந்திய நெல் சாகுபடிக்கு 14 நாள் வயதுடைய இள நாற்றுகளை அதிக இடைவெளியில் ஒற்றை நாற்று சதுர வடிவில் நடவு செய்ய வேண்டும். கோனாவீடர் களைக் கருவியை பயன்படுத்தி நடவு செய்ததில் இருந்து 10 நாட்களுக்கு ஒரு முறை குறுக்கும், நெடுக்குமாக களையெடுக்க வேண்டும். இதனால் மண் கிளறி விடப்படுவதுடன், அதிக தூர்கள் வெடிப்பதற்கும் வழிவகை செய்கிறது.

நடவு செய்ததில் இருந்து தண்டு உருளும் பருவம் வரை 2.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு நீரைப் பாய்ச்சி அது வடிந்து லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன் மறுபடியும் 2.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு நீரைப் பாய்ச்சுதல் வேண்டும். தண்டு உருளும் பருவத்துக்கு பின்னரும் மீண்டும் இதுபோல் நீரைப் பாய்ச்சினால் வேர்களின் பணியும், நுண்ணுயிர்களின் செயல்பாடும் நன்றாக இருக்கும். திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை மற்றும் 1 சென்ட் நாற்றாங்கால் போதுமானது. குத்துக்கு ஒரு நாற்று வீதம் ஒரு சதுரமீட்டருக்கு 16 குத்துக்களாக நாற்று நடலாம். எனவே, விவசாயிகள் தொழில்நுட்பங்களை கடைபிடித்து விளைச்சலை பெருக்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x