Published : 14 Nov 2020 03:14 AM
Last Updated : 14 Nov 2020 03:14 AM

தீபாவளியால் மதுரை மல்லிகை விலை உச்சம் காலையில் ரூ.2,000; மாலையில் ரூ.2500

மதுரைதீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தீபாவளியால் மதுரை மல்லிகை நேற்று கிலோ ரூ.2,000 முதல் ரூ.2500 வரை விற்பனையானது.

கரோனா ஊரடங்கால் மதுரை மல்லிகைக்குக் கடந்த 8 மாதங்களாக விலையில்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நடந்து முடிந்த ஆயுதபூஜையன்று கிலோ ரூ.2,000-க்கு விற்பனையானது. அதன்பிறகு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையே விற்றது.

தீபாவளிப் பண்டிகையால், கடந்த சில நாட்களாக மதுரை மல்லிகைக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மதுரை மல்லிகை விலை அதி கரிக்கத் தொடங்கியது.

தற்போது மழைக்காலம் என்பதோடு அதிக குளிரும் நிலவுவதால் மல்லிகைப் பூக்கள் உற்பத்தி 60 சதவீதம் குறைந்தது. அதனால், வழக்கமாக 14 முதல் 20 டன் வரை வரக்கூடிய மதுரை மல்லிகை தற்போது 4 டன் முதல் 6 டன் வரை மட்டுமே மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு நேற்று வந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.1,600-க்கு விற்றது. நேற்று உச்சமாக காலையில் ரூ.2000-க்கும், மாலையில் ரூ.2,500-க்கும் விற்றது. மதுரை மல்லிகைப் பூக்களுக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டதால் வியாபாரிகள் நிர்ண யித்த விலைக்கு சிறு, குறு வியாபாரிகளும், பொதுமக்களும் பூக்களை வாங்கிச் சென்றனர். இன்று தீபாவளி நாளில் கிலோ ரூ.3,000-ஐ தாண்டக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘மல்லிகைப்பூ மட்டுமல்லாது மற்ற பூக்கள் விலையும் கூடியுள்ளது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பிச்சிப்பூ ரூ.1,200, முல்லைப்பூ ரூ.1,200, மெட்ராஸ் மல்லி ரூ.1,200, கனகாம்பரம் ரூ.2,000, செவ்வந்தி ரூ.400-க்கு விற்றது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x