Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 120 சிறப்பு பேருந்துகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க ஆட்சியர்கள் அறிவுறுத்தல்

திருப்பூர்/உதகை

தீபாவளி பண்டிகையை ஒட்டி,திருப்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு 120 சிறப்பு பேருந்துகள்நேற்று முதல் இயக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளி பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் காலை 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் வகையில், குறைந்த ஒலி மற்றும் மாசை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே பொதுமக்கள் வெடிக்க வேண்டும். அரசுஅனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களிலும், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பண்டிகை காலங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டில், பின்னலாடைத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில், மற்ற மாவட்டங்களைவிட கூடுதலாக திருப்பூர் மாவட்டத்தில்இருந்து வெளிமாவட்டங்களுக்கு 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.இவை கோவில்வழி,பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது ‘‘திருப்பூரில் இருந்து மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு 50, திருச்சிக்கு 30, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20, சென்னை போன்ற பகுதிகளுக்கு 20 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம், 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் கோட்டத்தில் இருந்து மட்டும் 90 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் இன்னமும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.

காவல் துறை எச்சரிக்கை

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல்பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

தீபாவளி பண்டிகையின்போது அரசு அனுமதித்துள்ள நேரங்களை தவிர, பிற நேரங்களில் பட்டாசுவெடிப்பவர்கள் மீதும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பவர்கள் மீதும் உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும்’’என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை காத்திடுங்கள்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் மொத்த மாவட்டமும் உயிர் கோளப்பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலியலை கொண்ட பகுதியாகும். நம் மாவட்டம் பல்வேறு வகையான வன விலங்குகளுக்கும், அரிய வகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இச்சூழலில், மாவட்டத்தில் பட்டாசுகள் வெடிப்பதனால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின் அது மாவட்டத்தின் மென்மையான சூழலியலுக்கும், வன விலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஓசை எழுப்பக்கூடிய, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை மக்கள் வெடிக்க வேண்டாம். இதனை மீறுவோர் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல, பட்டாசு விற்பனை யாளர்களும், அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்யவேண்டும், தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் போன்ற வெடிகளை குடிசைகள் இல்லாத, வெட்டவெளியான பகுதிகளில் மட்டுமே வெடிக்க வேண்டும் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x