Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
‘‘இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்த 70 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு அல்லது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகிய 2 பாதிப்புகளும் இருந்ததாக மீனாட்சிமிஷன் மருத்துவமனை நீரிழிவு நோய் நிபுணர் சி.ஆர். மகேஷ்பாபு தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவ. 14-ல் உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு உலக நீரிழிவு தினத்தையொட்டி மீனாட்சிமிஷன் மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கான ஹோம் கேர் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இத்திட்டத் தொகுப்பில் மருத்துவ ஆலோசனை, நீரிழிவியல் நிபுணர், மருத்துவர்கள், சிறப்பு வல்லுனர், இயன்முறை நிபுணர், உணவுமுறை வல்லுனர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர் ஆகியோரது சேவைகள் நோயாளிகளின் வீடுகளிலேயே வழங்கப்படும். சிறுநீர் பகுப்பாய்வு, கொழுப்பு அளவு, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு செயல்பாடு சோதனை போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் மகேஷ்பாபு கூறியதாவது:
உலகெங்கிலும் கோவிட்-19 தொற்றின்போது மிக அதிகமாகக் கண்டறியப்பட்ட, நாட்பட்ட இணை – நோய்களுள் நீரிழிவும் ஒன்று. மேலும் இந்தியாவில் இன்னும் அதிகமாக நீரிழிவு நோய் இருக்கிறது. கோவிட் தொற்றால் உயிரிழந்த 70 சதவீதம் பேருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக உடற்பருமன் போன்ற இணை நோய்களும் இருந்தன. நீரிழிவை சிறப்பாகக் கட்டுப்படுத்தி இருந்தால் கரோனா உயிரிழப்பைக் குறைத்திருக்க முடியும்.
கோவிட் 19 தொற்று எப்படி ஆரோக்கியமானவர்களையும் நீரிழிவு நோயாளிகளாக ஆக்குகிறது என்பது இன்னும் தெளிவாக தீர்மானிக்கப்படவில்லை.
தனிநபர் தூய்மை, நோயெதிர்ப்பு திறன் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக உடற்பருமன் போன்ற நோய்களை தள்ளி வைப்பதன் முக்கியத்துவத்தை இந்த பெருந்தொற்று பொதுமக்களுக்கு உணர்த்தி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT