Published : 10 Nov 2020 03:12 AM
Last Updated : 10 Nov 2020 03:12 AM
மானாமதுரை அருகே தலித் பெண் ஊராட்சித் தலைவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதால், தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ளது கால்பிரவு ஊராட்சி. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் இந்த ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு ராஜேஸ்வரி பாண்டி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தாழ்த்தப்பட்டோர் என்பதால், அவருக்கு துணைத் தலைவர் நாகராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப் படுகிறது.
பதவியேற்ற ஓராண்டில் ஊராட்சித் தலைவரால் எந்தவொரு நலத்திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.
இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் அவர் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ஒன்றியத் தலைவர் லதா அண்ணாத்துரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், சுந்தரமகாலிங்கம் ஆகியோர் கால்பிரவு ஊராட்சியில் விசாரணை நடத்தினர்.
இது குறித்து ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி பாண்டி கூறியதாவது:
என்னை சாதி ரீதியாக அச்சுறுத்துகின்றனர். வார்டு உறுப்பினர்களை என்னிடம் பேச விடுவதில்லை. மேலும் பணியைச் செய்ய விடாமலும் தடுக்கின்றனர். வங்கிக் காசோலைப் புத்தகத்தை யும் பறித்துக் கொண்டனர். அனைவரும் துணைத் தலைவரின் பேச்சைத் தான் கேட்கின்றனர்.
ஊராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களை ஏலம் விடாமல் தடுக்கின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தேன் என்றார்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள் கூறுகை யில், ‘‘ஊராட்சித் தலைவர் புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT