Published : 08 Nov 2020 03:12 AM
Last Updated : 08 Nov 2020 03:12 AM
திருப்பூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப் பட்டுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழைதொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் திருப்பூர் மாவட்ட வளர்ச்சிதிட்டப் பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலருமான கே.கோபால் தலைமை வகித்து பேசும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு, நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும்வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். மேற்கண்ட பணிகளின் கள விவரங்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள ஜம்மனை ஓடையை தூர்வாரும் பணியையும், காதர்பேட்டை, ஜெய்வாய் பள்ளி அருகில் கட்டப்பட்டுவரும் பிரதான வடிகால் கால்வாய் அமைக்கும் பணியையும் கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலர் கே.கோபால் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பணிக்கம்பட்டிஊராட்சி சின்னியகவுண்டன்பாளையத்தில், ரூ.11.38 கோடியில் திறந்துவைக்கப்பட்ட கோழியின நோய் ஆய்வுக்கூடம் மற்றும் தீவன நீர் பகுப்பாய்வு கூடத்தையும், பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்ப கவுண்டன்பாளையத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.9 லட்சம் மதிப்பில் சுமார் 80 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.
வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, தாராபுரம் சார்-ஆட்சியர் பவன்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், கோட்டாட்சியர் ஜெகநாதன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT