Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்ததைக் கண்டித்து மதுரை உட்பட ஆறு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் முருகன் நவ.6 முதல் டிச.6-ம் தேதி வரை அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரைதிண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா கட்சியினர்.
மதுரையில் ஆட்சியர் அலுவலகம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கேகே.சீனிவாசன், மாவட்டப் பார்வையாளர் நரசிங்கப் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் ஹரிகரன், பொதுச் செயலர் சுந்தர் உட்பட 150-க்கும் மேற்பட்டோரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் மலைச்சாமி கைது செய்தார்.மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் செய்த மாநில பாஜக செயலர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் மகா.சுசீந்திரன், மாவட்டச் செயலர் முருகன் உட்பட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்த கிழக்கு மாவட்டத் தலைவர் கஜேந்திரன் உட்பட 74 பாஜகவினரை சூலக்கரை போலீஸார் கைது செய்தனர்.இதேபோல் சிவகாசி சார்- ஆட்சியர் அலுவலகம் முன் மேற்கு மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்த 18 பெண்கள் உட்பட 173 பாஜகவினரை சிவகாசி நகர் போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தனபாலன் தலைமை வகித்தார். ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே, கொடைக்கானல் மூஞ்சிக்கல், பழநி பேருந்து நிலையம் அருகே மற்றும் வடமதுரை, வேடசந்தூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 30 பெண்கள் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி
தேனியில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இருந்து பாஜகவினர் பேரணியாகச் சென்று ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பாஜக தலைவர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர் வெங்கடேஸ்வரன் உட்பட 305 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் அரண்மனை வாசல் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கலந்து கொண்ட மாவட்டத் தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள் சொக்கலிங்கம், உதயா, தனசேகரன், மேம்பல்சக்தி, நாகேஸ்வரன், கோமதிநாச்சியார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் அரண்மனை பகுதியில் இருந்து வழிவிடு முருகன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். இவர்களை டிஎஸ்பி வெள்ளைத்துரை தலைமையிலான போலீஸார் கோட்டைவாசல் விநாயகர் கோயில் அருகே தடுத்து நிறுத்தினர். அதை மீறி ஊர்வலம் சென்ற மாவட்ட பாஜக தலைவர் கே.முரளிதரன், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் குமார் உட்பட 352 பேரை போலீஸார் கைது செய்தனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT