Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாயில், வேலம்பட்டி தொட்டி பாலம் முன்பு மண் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விளை நிலங்களில் புகுந்தது.
கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக் கால்வாய் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து, சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் வேலம்பட்டி பகுதியில் 300 மீட்டருக்கு தொட்டி பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
தொட்டிப்பாலம் முன்பு 100 மீட்டர் தூரத்துக்கு மண் கால் வாய் உள்ளதால் அடிக்கடி நீர்க்கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதாகவும், தண்ணீர் எளிதாக கடக்கும் வகையில் தொட்டிபாலத்தை அகலப்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த மாதம் 21-ம் தேதி பாளேகுளி ஏரியில் இருந்து இணைப்பு ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில், வேலம்பட்டியில் தொட்டிபாலத்தின் அருகே மண் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. காலை 6 மணி வரை வெளியேறிய தண்ணீர், அப்பகுதிகளில் உள்ள விளை நிலங்கள், குடியிருப்புகளில் புகுந்தது.தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வருவாய் ஆய்வாளர் சதாசிவம், நாகரசம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராகேஷ்சர்மா ஆகியோர் அப்பகுதி விவசாயிகளுடன் இணைந்து உடைப்பை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாரூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், பணி ஆய்வாளர் மகேந்திரன், கேஆர்பி இடதுபுறக் கால்வாய் பாசன விவ சாயிகள்சங்க தலைவர் சிவகுரு மற்றும் விவசாயிகள், தண்ணீர் வெளியேறாத வகையில் கற்கள் வைத்தும், மணல் மூட்டைகளை அடுக்கியும் உடைப்பை சரி செய் தனர்.
பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன் கூறும்போது, ‘‘தொட்டி பாலம் அருகே உள்ள மண் கால்வாயில் எலி வளையால் நீர்க்கசிவு ஏற்பட்டு உடைந்துள்ளது.
மணல் மூட்டைகளால் உடைப்பு சீர் செய்யப்பட்டு, தண்ணீர் வழக்கம் போல் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT