Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM
அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர்த் திட்டத்தை வரும் 10-ம் தேதிநடைபெறும் விழாவில், தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அழகியபாண்டியபுரம் பேரூராட்சி உட்பட 8 பேரூராட்சிகள், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 246 ஊரக குடியிருப்புகள் பயன் பெறும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாரூ.109.79 கோடி செலவில் அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதிஆணை பிறப்பித்தார்.
இத்திட்டத்துக்கான நீர் ஆதாரமாக கோதையாற்றில் திற்பரப்பு அருவிக்கு மேல்பகுதியில், களியல்பாலத்தின் அருகே கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து நீர் உறிஞ்சும் குழாய் மூலம் அருமநல்லூர் அருகே சுத்திகரிக்கப்பட்ட நிலையம் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த திட்டப்பணி பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து, முழுவதுமாக முடிக்கப்பட்டு, கடந்த 3-ம் தேதி களியல் தலைமையிடப் பகுதியில் உயரழுத்த மின்இணைப்பு பெறப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியது. சோதனை ஓட்டப் பணிகளை நிர்வகிக்க, தலாஇரு பொறியாளர்கள் கொண்ட 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 நிர்வாக பொறியாளர்களால் கண்காணிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் மணிமோகன் கண்காணித்து வருகிறார். தமிழக முதல்வர் கே.பழனிசாமி, நாகர்கோவிலில் வரும் 10-ம் தேதி நடைபெறும் விழாவில், அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் ஆலோசனை
முதல்வர் வருகையை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் சரண்யா அறி, கோட்டாட்சியர் மயில் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். விழா நடைபெறும்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நவ.11-ல் முதல்வர் ஆய்வு
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 11-ம் தேதி காலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார். அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் வரும் 11-ம் தேதி காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கெனவே தயாராக உள்ளன. தூத்துக்குடி மாவட்ட மக்கள் திருப்திபடும் வகையில் அறிவிப்புகள் இருக்கும்.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெற உள்ளூர் திட்டக் குழுவில் விண்ணப்பித்திருந்தாலே போதும், பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அமையும் புதிய பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அங்கீகார ஆணைகளை வழங்குகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 83 பள்ளிகள் தொடங்க அங்கீகார ஆணை வழங்கப்படவுள்ளது என்றார் அமைச்சர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT