Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

வீட்டை அபகரிக்க தந்தை, சகோதரர் திட்டம் தூத்துக்குடி எஸ்பியிடம் மாற்றுத்திறன் பெண் புகார்

தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமாரிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண் முத்துலட்சுமி, அவரது கணவர் மற்றும் மகன்.

தூத்துக்குடி

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(39). நடக்க இயலாத மாற்றுத்திறனாளி. பிகாம் பட்டதாரியான இவர், பத்திர பதிவு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் ஏகாம்பரமும் மாற்றுத்திறனாளி. இவர்கள் தங்கள் மகனுடன் தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

முத்துலட்சுமி கூறும்போது, “சுந்தர வேல்புரத்தில் வீடு ஒன்றை விலைக்கு வாங்க எனது தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரர் பண உதவி கேட்டனர். எனது சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்திருந்த நகைகள் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று பணத்தை கொடுத்தேன். அதைக்கொண்டு சுந்தரவேல்புரத்தில் வீடு விலைக்கு வாங்கினர்.

அந்த வீட்டில் கீழ்ப்பகுதியில் எனது குடும்பமும், மாடியில் சகோதரர் குடும்பமும் வசித்து வருகிறோம். இந்நிலையில் வீட்டை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கில் தந்தையும், சகோதரரும் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

என்னை அடித்து வீட்டைவிட்டு வெளி யேற்றினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாற்றுத் திறனாளி தம்பதியர் மனு கொடுக்க வந்திருப்பதை அறிந்த எஸ்பி ஜெயக்குமார், முதல் மாடியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து இறங்கி வந்து அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x