Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

குளங்களை நிரப்பி குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மோளரபட்டி ஊராட்சி பொதுமக்கள் வேண்டுகோள்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

தாராபுரம் வட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மோளரபட்டி ஊராட்சித் தலைவர் ர.குமரவேல் தலைமையிலான கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மனு அளித்தபின்பு கூறியதாவது: எங்கள் ஊராட்சியில் மோளரபட்டி, கள்ளிவலசு, சேனாபதிக்கவுண்டன்புதூர் ஆகிய மூன்று ஊர்களிலும், கிணறுகள் அனைத்தும் ஓராண்டாக வறண்டு காணப்படுகின்றன. மழை இல்லாததால் குளங்களும் வற்றிவிட்டன. ஊராட்சிக்கு அருகே அமராவதி கடைமடை கால்வாயில் இருந்து குருசாமி கோயில் ஓடை வரை இரண்டு கிலோ மீட்டர் கால்வாய் அமைத்து, உப்பாறு அணை வரை உள்ள நான்கு குளங்களை நிரப்பி குடிநீர் ஆதாரத்தை ஏற்படுத்தித்தர வேண்டும்.

உப்பாறு அணை இருந்தும், எங்களுக்கு ஓர் ஏக்கர் நிலம்கூட பாசன வசதி பெறமுடிவதில்லை. அமராவதி அணையில் நீர் நிரம்பி ஆற்றில் உபரியாக செல்லும் காலங்களில், அமராவதி பாசனக் கால்வாய் கடைமடை கால்வாய்கள் வழியாக எங்கள் கிராமத்தில் உள்ள நான்கு சிறிய குளங்களை ஆண்டுக்கு இருமுறை நிரப்பினால்கூட, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும், என்றனர்.

பட்டா வழங்க கோரிக்கை

அவிநாசி வட்டம் அம்மாபாளையம் குமரன் காலனி பொதுமக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 40 பேர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1994-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை விலைக்கு வாங்கினோம். வீட்டுக்கான பத்திரம் எங்கள் பெயரில் உள்ளபோதும், இதுவரை பட்டா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக 2015-ம் ஆண்டு முதல் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களால் வீடுகளை விற்கவோ, கடன் வாங்கவோ முடியவில்லை. எங்களுக்கு பட்டாவை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

சுகாதாரமில்லாத வாழ்க்கை

அமராவதிபாளையம் பெரியார் நகர் பொல்லிக்காளிபாளையம் அருந்ததியர் காலனி மக்கள் அளித்த மனு:

எங்கள் பகுதியில் 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால், சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் சமுதாய நலக்கூடம் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

சுகாதாரமற்ற முறையில் வாழ்ந்து வரும் எங்களுடைய அவலத்தை போக்க வேண்டும், என குறிப்பிட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x