Published : 03 Nov 2020 03:13 AM
Last Updated : 03 Nov 2020 03:13 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல்வேறுஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து வருகின்றனர்.
கல் குவாரி
கயத்தாறு வட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள், அப்பகுதி பால் உற்பத்தியாளர் கூட்டுறவுசங்கத் தலைவர் கோதண்டராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சீனிப் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு:கயத்தாறு வட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருகிறோம். மக்காச்சோளம், சிறுகிழங்கு, சீனிக்கிழங்கு, சீனிஅவரை மற்றும் பட்டஅவரை போன்ற காய்கறி பயிர்களும், பழமரங்களும் பயிரிட்டு உள்ளோம்.
எங்களது விவசாய நிலங்களுக்கு மத்தியில் சிலர் சரள் குவாரி மற்றும் கல் குவாரி நடத்த அனுமதி கோரி இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தில் குவாரிக்கு அனுமதி அளித்தால் விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்களுக்கு செல்லும் மாடுகள் பாதிக்கப்படக் கூடும். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். எனவே, அப்பகுதியில் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது எனக் கூறியுள்ளனர்.
இடஒதுக்கீடு
சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 18 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒரு சதவீதம் பழங்குடியினருக்கும், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என்று இடஒதுக்கீடு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தலில் வாக்களிக்கப்போவது இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சாலை வசதி
எட்டயபுரம் தாலுகா மாவில்பட்டி ஊராட்சியைசேர்ந்த விஸ்வகர்ம சமுதாய மக்கள் பிச்சைபெருமாள் தலைமையில் அளித்த மனுவில், ‘எங்கள் ஊரில் மயானச்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதற்காக 2 முறை அரசுநிதி ஒதுக்கியும், சாலை அமைக்கப்படவில்லை. எனவே, பொதுமயானச் சாலை, ஆதிதிராவிட பொதுமயானச் சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT