Published : 17 Dec 2021 03:09 AM
Last Updated : 17 Dec 2021 03:09 AM
திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்
வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர் களின் 2 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது.
நடப்பு மக்களவை கூட்டத் தொடரில் 2 பொதுத்துறை வங்கி களையும், ஒரு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார் மயமாக்குவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும். வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 400 வங்கி கிளைகளைச் சேர்ந்த 3,700 ஊழியர்கள் இந்த போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். 400 வங்கி கிளைகளும் மூடப்பட்டு ள்ளன. வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரூ.500 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிக்கப் பட்டுள்ளதாக வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். பாளையங்கோட்டை இந்தியன் வங்கியின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. 5 ஊழியர் சங்கங்கள், 4 அலுவலர் சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் சுமார் 3,000 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் மொத்தம் 175 வங்கி கிளைகள் உள்ளன. இதில் சில தனியார் வங்கி கிளைகளை தவிர 135 வங்கி கிளைகள் மூடிக்கிடந்தன. சுமார் ரூ.400 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.பல இடங்களில் வழக்கம் போல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கை யாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கி தொழிற்சங்க ஐக்கிய பேரவை ஒருங்கிணைப்பாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
வங்கி ஊழியர் கூட்டமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க மண்டல செயலாளர் கவின்ஸ்டன், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர் சங்கச் செயலாளர் தங்கமாரியப்பன், நகர வங்கி ஊழியர் சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.வெங்கடேசன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக இன்றும் நடை பெறுகிறது.
கோவில்பட்டி
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, எட்டயபுரம் சாலையில் உள்ள கனரா வங்கி ஆகியவை ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின. சில வங்கிகளின் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டிருந்தன.
நாகர்கோவில்
இதைப்போல் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டாலும் பணம் நிரப்பப்படாததால், பாதிக்கும் மேற்பட்டவற்றில் பணம் இன்றி வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.
நாகர்கோவில் வடசேரி பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சிதம்பரம் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT