Published : 15 Dec 2021 03:07 AM
Last Updated : 15 Dec 2021 03:07 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்- 2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்துவாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ச.ஜெயந்தி பேசியதாவது:
வாக்காளர் பட்டியலில் படிவம்7-ஐ உரிய முறையில் சரிபார்க்க வேண்டும். தொடர்புடைய நபர்,படிவம் 7 குறித்து விண்ணப்பித்துள்ளாரா என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், வீட்டு உரிமையாளர் படிவம் 7-ஐ கொடுத்தால், அதனைசரிபார்த்துதான் நீக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் இப்படிவத்தை கவனமாக கையாள வேண்டும். தொடர்புடைய நபரை படிவம் 7-ஐ மட்டும் வைத்து நீக்கம் செய்தால், பின்னர் அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். களப்பணிக்கு செல்லும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களான ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இதனை சரிபார்க்க வேண்டும். அதேபோல என்விஎஸ்பி, விஹச்ஏ, வோட்டர் ஃபோர்ட்டல், கருடா போன்ற இணையவழியில் திருத்தங்கள் மேற்கொள்வது மிக எளிதாக உள்ளது.
இதுதொடர்பாக மக்களிடமும், கல்லூரி மாணவ, மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு நவம்பர், 1-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை திருத்தம் தொடர்பாக 7,370 விண்ணப்பங்கள் இணையத்தில் வந்துள்ளன.இவ்வாறு அவர் பேசினார். இதில், கோட்டாட்சியர் ஜெகநாதன், தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் பல்லடம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பெயர் நீக்கம், சேர்க்கை மற்றும் திருத்தம்தொடர்பாக பெறப்பட்ட மனுதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்புப் பார்வையாளர் ச.ஜெயந்தி ஆய்வு செய்தார்.திருப்பூரில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு திருத்தங்கள் தொடர்பாக மனு அளித்திருந்த நபர்களின் வீடுகளுக்கே சென்று ஆய்வு நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ச.ஜெயந்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT