Published : 15 Dec 2021 03:10 AM
Last Updated : 15 Dec 2021 03:10 AM
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியத்துக்கு உட்பட்ட வானாபாடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, முகாமை தொடங்கி வைத்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தாது உப்புக்கலவை பாக்கெட்டுகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 லட்சத்து 97 ஆயிரம் கால் நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. நேற்று தொடங்கிய முகாம் வரும் ஜனவரி 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 26 கால் நடை உதவி மருத்துவர்கள் மற்றும் 12 கால்நடை ஆய்வாளர்கள் மூலம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் சினை மாடுகள், கறவை மாடு மற்றும் கன்றுகள் உட்பட அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
கால்நடைகளின் காதுகளில் வில்லையும் பொருத்தப்படுகிறது. அதில் உள்ள 12 இலக்க எண் இணையதளத்தில் பதிவு செய்து அத்துடன் கால்நடைகளின் இனம், கன்றுகள் ஈன்ற விவரம், கால் நடைகளின் பால் கறந்த அளவு, தடுப்பூசிகள் மேற்கொள்ளப்படும் விவரம் பதிவு செய்யப்படும்.
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியில் வேலூர் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் நவநீத கிருஷ்ணன், உதவி இயக்கு நர்கள் பாஸ்கர், உதயகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் ஜெய்கணேசன், சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT