Published : 14 Dec 2021 03:09 AM
Last Updated : 14 Dec 2021 03:09 AM

சேலத்தில் குண்டு மல்லி ரூ.1,300-க்கு விற்பனை :

சேலம்

சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்த நிலையில், நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, வீராணம், வலசையூர், சங்ககிரி, தாரமங்கலம், கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பருத்திக்காடு, ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் பூக்கள் சேலம் வஉசி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விறபனை செய்து வருகின்றனர். இங்கிருந்து பெங்களூரு, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும், சேலம் மாவட்ட வியாபாரிகள், பொதுமக்களும் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.

கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் வரை சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால், பூக்கள் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூ மார்க்கெட்டுக்கு குண்டு மல்லி, முல்லை, சாதி மல்லி உள்ளிட்ட மலர்கள் வரத்து குறைந்துள்ளது.இதனால், பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக வஉசி பூ மார்ககெட் வியாபாரி செந்தில்குமார் கூறும்போது, “தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வரும் நிலையில் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.1,600, முல்லை ரூ.1,000, சாதி மல்லி ரூ.800, பன்னீர் ரோஸ் ரூ.200, சம்பங்கி ரூ.100, அரளி ரூ.260-க்கும் விற்பனையானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x