Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
பட்டப்படிப்பு, பி.எட் முடித்துவிட்டு பிளஸ் 2 முடித்தவரை ஆசிரியராக நியமனம் செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்தவர் ஜோசப் இருதயராஜ். இவர் 1984-ல் 10-ம் வகுப்பு, 1991-ல் பட்டப் படிப்பு, 1993-ல் பி.எட் பட்டம் பெற்றார். கோவை செயின்ட் மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் 2007-ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 2010-ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில் கல்வித் தகுதி வரிசைக்கிரமமாக இல்லை என்று கூறி, ஜோசப் இருதயராஜின் ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்பதல் வழங்க பள்ளி கல்வித்துறை மறுத்துவிட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஜோசப் இருதயராஜ் நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பள்ளி கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் 2009 அரசாணையில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிக்கு பிறகு பெறப்படும் பட்டங்களே பணி நியமனம், பதவி உயர்வுக்கு தகுதியானது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணைப்படி ஜோசப் இருதயராஜ் கல்வித் தகுதியை பெறவில்லை.
ஒழுங்கான வரிசைப்படி கல்வித் தகுதி பெறாதவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வில் மிக குறைந்தளவு உரிமையை மட்டுமே பெற முடியும். ஒழுங்கான வரிசைப்படி படித்து பட்டங்களை பெற்றவர்களைப்போல் பதவி உயர்வு, சம்பள உயர்வில் சம உரிமையை கோர முடியாது. ஜோசப் இருதயராஜ் ஒழுங்கான வரிசைப்படி கல்வித் தகுதி பெறவில்லை.
எனவே, இவரது பணி நியமனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும், அவரது பணியை பள்ளி கல்வித்துறை இதுவரை பயன்படுத்தி வந்துள்ளதால், அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தை பள்ளி கல்வித்துறை திரும்ப வசூலிக்க கூடாது. ஆசிரியரும் தனக்கு பண பலன்களை கோரக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT