Published : 13 Dec 2021 03:07 AM
Last Updated : 13 Dec 2021 03:07 AM
சித்தோடு தனியார் ஆலையில் ஏற்பட்ட குளோரின் வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், பொதுமக்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் (44). இவர் சித்தோடு சந்தைக்கடைமேடு பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக குளோரின் வாயு சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி குடோனில் இருப்பு வைத்து ஈரோட்டில் உள்ள சாய, சலவை ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் குடோனில் இருந்த ஒரு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. குளோரின் வாயு அதிக அளவில் வெளியேறி அப்பகுதி முழுவதும் பனி சூழ்ந்தது போல் வாயு படர்ந்தது. இதனால் கிடங்கில்இருந்தவர்கள், சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
வாயு கசிவை சரிசெய்ய முயன்றபோது உரிமையாளர் தாமோதரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், குடோனில் இருந்த 3 தொழிலாளர்கள், அருகில் இருந்த தறிப்பட்டறை தொழிலாளர்கள், பொதுமக்கள் என 14 பேர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர்சு. முத்துசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி கூறுகையில், குளோரின் வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT