Published : 11 Dec 2021 03:09 AM
Last Updated : 11 Dec 2021 03:09 AM

அரசு விரைவுப் பேருந்துகளில் - டிச. 14 முதல் டிக்கெட் முன்பதிவு :

சென்னை

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் வரும் 14-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. மேற்கண்ட நாட்களில் தொடர் அரசு விடுமுறை வருவதால், வெளியூரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக, சென்னையில் இருக்கும் பெரும்பாலான மக்கள் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிடுவார்கள். ஏற்கெனவே, விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டன. சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 300 கி.மீ.க்கு அதிகமான தொலைவுள்ள இடங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சொகுசு, படுகை வசதி கொண்ட சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு, சொகுசு பேருந்துகளில் பொங்கலுக்கு முன்கூட்டியே செல்ல விரும்புவோர் வரும் 14-ம் தேதி முதல் www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com, www.makemytrip.com, www.goibgo.com ஆகிய இணையதளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் வரும் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் இருக்கின்றன. பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இறுதியான பிறகு போக்குவரத்து துறை அமைச்சர் இதற்கான பட்டியலை அறிவிப்பார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x