Published : 11 Dec 2021 03:10 AM
Last Updated : 11 Dec 2021 03:10 AM
சென்னையில் கல்லூரிகள், விடுதிகளில் பின்பற்ற வேண்டிய கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உயர்கல்வி துறை செயலர் தா.கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா, உயர்கல்வி இயக்குநர் ஆர்.ராவணன், சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, பதிவாளர் ஜேன் பிரசாத், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கல்லூரிகள், விடுதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரம், உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, ஐஐடி, பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், தடுப்பூசி செலுத்திய மாணவர்களை மட்டுமே கல்லூரி வகுப்புக்கு அனுமதிக்குமாறு உயர்கல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கல்லூரிகளில் 46 சதவீத மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசியும், 12 சதவீத மாணவர்கள் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக்கழத்தில் 100 சதவீத மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
கலை நிகழ்ச்சிகள், மாணவர்கள் கூட்டமாக பங்குபெறும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது. இதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு உயர்கல்வி துறை உடனே கடிதம் வாயிலாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT