Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM
சென்னை மாநகராட்சிக்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 61.18 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடக்க உள்ளதால், மாநகராட்சி அளவிலான புகைப்பட வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் புகைப்பட வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி, சென்னை மாநகராட்சியில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 803 ஆண்கள், 30 லட்சத்து 93 ஆயிரத்து 355 பெண்கள், 1,576 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 61 லட்சத்து 18 ஆயிரத்து 734 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் 159-வது வார்டில் 3,116 வாக்காளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் 37-வது வார்டில் 58,620 வாக்காளர்களும் உள்ளனர்.
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டு அலுவலகங்களிலும் மக்கள் பார்வைக்கு இந்த பட்டியல் வைக்கப்படும். அனைவரும் தங்களது பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் குறித்த விவரங்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
மாநகராட்சி தேர்தலுக்காக 200 வார்டுகளுக்கான வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆண்களுக்காக 255, பெண்களுக்காக 255, பொதுவாக 5,284 என மொத்தம் 5,794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். அதிகபட்சமாக, தேனாம்பேட்டை மண்டலத்தில் 622, குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 97 வாக்குச் சாவடிகள் அமைகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷூ மஹாஜன், கூடுதல் வருவாய் அலுவலர் லோகநாதன், உதவி வருவாய் அலுவலர்கள் நடராஜன், மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT