Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வழக்கு குறித்து இருப்பிடத்துக்கே சென்று - காவல் ஆய்வாளர்கள் நேரில் விசாரிக்க வேண்டும் : திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் அறிவுரை

திருப்பத்தூரில் நேற்று காவல் துறை சார்பில் மக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி புகார்தாரர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என 3 காவல் உட்கோட்டங்கள் உள்ளன.

இங்கு அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமலும், புகார்தாரர்களை காவல் நிலை யங்களுக்கு வரவழைத்து பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களை அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் காவல் துறையினர் மீது 100-க்கும் மேற்பட்ட புகார் மனுக் களை பொதுமக்கள் வழங்கி வந்தனர். இந்நிலையில், காவல் நிலையங்களில் புகார் அளித்து வழக்குக்கு தீர்வு காணாமல் உள்ள மக்களுக்கான குறை தீர்வுக்கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருப்பத்தூர்மாவட்ட எஸ்.பி., டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்தவர்களை நேரில் அழைத்து புகார் குறித்தும், வழக்கு குறித்தும் விசாரணை நடத்தினார். பிறகு, பொதுமக்கள் எந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தார்களோ அந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், எழுத்தர்களை அழைத்து வழக்கின் போக்கு குறித்து விசாரித்தார்.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் எஸ்.பி., டாக்டர் பால கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பொதுவாக காவல் நிலையங் களில் பொதுமக்கள் புகார் அளித்தால் 3 நாட்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் மனு பெற்ற உடன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் சிஎஸ்ஆர் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி.

அதேநேரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் காவல் நிலையங்களில் புகார் அளிப்பவர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் அலுவலக ஊழியர்கள், புகார் தாரர்களிடம் 5 கேள்விகளை கேட்பார்கள்.

அதாவது, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பிரச் சினைகள் தீர்க்கப்பட்டதா? காவல் துறையினர் புகார்தாரர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய் கிறார்களா? வழக்கை முறையாக விசாரிக்கிறார்களா? காவல் துறையினர் நடவடிக்கைக்கு புகார்தாரர்கள் 1 முதல் 10 வரை எத்தனை மதிப்பெண்கள் அளிப்பீர்கள்? என்ற கேள்விகள் கேட்கப்படுகிறது.

இந்த கேள்விக்கு அதிருப்தி தெரிவித்தவர்களுடன் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றுள்ளது. புகார்தாரர்களின் குறைகள் கேட்கப் பட்டுள்ளது. அதற்கான தீர்வு விரைவில் காணப்படும்.

காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப் பிடங்களுக்கே நேரில் சென்று அந்தந்த காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் வழக்கை துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இக்கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை ஏட்டுகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x