Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்து கணக்கெடுப்பு நடத்த ஒரு வாரத்தில் ஆணையம் அமைக்கப்படும் : உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தகவல்

சென்னை

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீட்டுக்காக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்துகணக்கெடுப்பு நடத்த ஒரு வாரத்தில் ஆணையம் அமைக்கப்படும் என புதுச்சேரி அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சுழற்சி முறையில் வார்டுகள் ஒதுக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகக்கூறி முத்தியால்பேட்டை சுயேட்சை எம்எல்ஏ-வான பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவிப்பை திரும்பப்பெற மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுமதி அளித்து, 5 நாட்களில் புதிதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி,உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்று புதுச்சேரி அரசு அரசாணைகளை பிறப்பித்தது. இதை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா மற்றும் சுயேட்சை எம்எல்ஏ-வான பிரகாஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், இதில் அரசியல் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என்பதால் அவர்களி்ன் அரசியல் பின்தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது. அந்த ஆணையம் தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும், என்றார்.

இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பில் தங்களது வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து இந்த விசாரணையை இன்றைக்கு (டிச.1) தள்ளிவைத்த நீதிபதிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதால், அதுகுறித்து மனுதாரர்கள் தரப்பிலும் விளக்கமளிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த புள்ளி விவரங்கள் இல்லை என்பதால் அவர்களின் அரசியல் பின்தங்கிய நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x