Published : 27 Nov 2021 03:08 AM
Last Updated : 27 Nov 2021 03:08 AM
ஈரோடு மாவட்டத்தில் தொடர்மழையால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைவாக போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பவானி பாசனம் இரண்டாம் போக நீர் திறப்பு குறித்து முன்கூட்டியே அறிவித்தால், அதற்கேற்ப விவசாயிகள் நிலத்தினை தயார் செய்ய முடியும். உரத்தட்டுப்பாட்டை போக்கி, எல்லா பகுதிகளிலும் தடையின்றி உரம் கிடைக்கச் செய்ய வேண்டும். சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், கரும்புக்கான தொகையை வழங்க காலதாமதம் செய்யும் நிலையில், வேறு ஆலைகளுக்கு கரும்பினை விவசாயிகள் வழங்க அனுமதிக்க வேண்டும்.
வன உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, வனப்பகுதி விவசாயிகளுக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.
தொடர்மழையால் ஏற்பட்ட பயிர்சேதத்திற்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பாசன வாய்க்கால் மற்றும் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மரவள்ளிக்கு விலை நிர்ணயம் செய்ய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். பூந்தோட்ட விவசாயிகளுக்கும் இலவச மின்சார திட்டத்தில் இணைப்பு வழங்க வேண்டும், என்றனர்
விவசாயிகளுக்கு பதிலளித்து ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி பேசியதாவது:
உரத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் மழையால் ஏற்பட்ட பயிர்சேதம் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். வனப்பாதுகாப்பு சட்டம் குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், வேளாண் இணை இயக்குநர் சி.சின்னசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT