Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM
தொடர் கனமழை காரணமாக பச்சமலையிலுள்ள சாலைகளில் 17 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கோரையாறு, மங்களம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக பச்சமலையில் மூலக்காடு பகுதியிலிருந்து செம்புளிச்சான்பட்டி வரை செல்லக்கூடிய சாலையில் 6 இடங்களிலும், சோபனாபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லக்கூடிய சாலையில் 11 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், இந்த 2 சாலைகளின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசியத் தேவைக்குக்கூட மலைவாழ் மக்களும், வனத்துறையினரும் துறையூர் வர முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதையடுத்து, திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் என்.சதீஷ் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலர் கிரண் மேற்பார்வையில், துறையூர் வனச் சரகர் பொன்னுசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் மலைப் பாதைகளை சீரமைக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அதன்பின், இந்த சாலைகளில் நேற்று மாலை முதல் மீண்டும் வாகனப் போக்குவரத்து தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT