Published : 24 Nov 2021 03:08 AM
Last Updated : 24 Nov 2021 03:08 AM
வாழப்பாடி அடுத்த ஆனைமடுவு அணை 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், வசிஷ்ட நதியின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் அருநூற்றுமலை அடிவாரத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே 75.45 அடி உயரத்தில் ஆனைமடுவு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 67.25 அடி உயரத்துக்கு நீரைத் தேக்க முடியும். தற்போது பெய்த வட கிழக்குப் பருவமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
அணைக்கு நேற்று விநாடிக்கு 110 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணை நீர்மட்டம் 64.47 அடியாக உள்ளது. அணையில் இருந்து நீர் திறப்பு இல்லாத நிலையில் அணை ஓரிரு நாளில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அணை நிரம்பியதும் வசிஷ்ட நதியில் உபரிநீர் வெளியேற்றப்படும். எனவே, வசிஷ்ட நதி கரையோரப் பகுதி மற்றும் அணை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அணை மூலம் நீர்முள்ளிக்குட்டை, குறிச்சி, சி.என்.பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 11 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கரியக்கோவில் அணை
இதனிடையே, பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கரியக்கோவில் அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 52.05 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் நேற்று நீர்மட்டம் 47.74 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 156.50 கனஅடி வீதம் நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லாத நிலையில், இந்த அணையும் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணை மூலம் 3 ஆயிரத்து 788.76 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதால், அணை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT