Published : 23 Nov 2021 03:08 AM
Last Updated : 23 Nov 2021 03:08 AM
சேலத்தில் வரும் 26-ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
சேலம் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:
சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 26-ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமில், 200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளன.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login-ல் User ID, Password உருவாக்க தங்களது செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், User ID, Password -ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ. டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஓட்டல் மேனேஜ்மன்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதிகள் உள்ளிட்ட கல்வி தகுதிகள் கொண்டவர்கள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0427-2401750, 94990-55941 என்ற தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) செல்வம், வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT