Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

உலக மீனவர் தினவிழாவில் நலத்திட்ட உதவி வழங்கல் :

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை கிராமத்திலுள்ள ரோச் பிஷப் மேல்நிலைப்பள்ளியில் உலக மீனவர் தினவிழா நடை பெற்றது.

இந்த விழாவில் மீனவர் களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி களையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தலைவர் பேசும்போது, தமிழகத்தின் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் திருநெல்வேலி மாவட்டம் 48.90 கி.மீ. நீளத்தை கொண்டுள்ளது. 31,456 ஹெக்டேர் உள்நாட்டு நீராதாரங்களும், இம்மாவட்டத்தின் மீன்வளத்துக்கு வலுசேர்க்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் 7 கடல் மீனவ கிராமங்களிலும் 10 உள்நாட்டு மீனவ கிராமங்களிலும் சேர்த்து 40,000 பேர் மீன்வள ஆதாரங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சார்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள மீனவர்களுக் கு சமூகப் பொருளாதார பாதுகாப்பு வழங்குவதையும் மீனவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மீனவர்களை ஊக்குவித்தல், உலகத்தரம் வாய்ந்த மீன்பிடி கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் இதர பல சமூகப் பொருளாதார முன்னேற்றத் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டுமுதல் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 5 ஆயிரம் மீனவ குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

விழாவில் கடல்சார் கல்வி பயிலும் 2 மீனவ இளைஞர்களுக்கு தலா ரூ.25,000, தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் இயற்கை மரணமடைந்த 6 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.17,500, 15 பேருக்கு மாதாந்திர உதவிதொகை, முதியோர் உதவிதொகை, மற்றும் மாற்றுதிறனாளிகள் விதவை உதவிதொகைக்கான ஆணை களையும், 10 மீனவர்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக் களையும் சட்டப் பேரவை தலைவர் வழங்கினார்.

மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி. எஸ்.ஆர்.ஜெகதீஷ், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார், மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சரோஜ்குமார், மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x