Published : 18 Nov 2021 03:08 AM
Last Updated : 18 Nov 2021 03:08 AM
மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கவே, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை தொடக்கப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் நேற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடந்தன. தலைவாசல், ஆத்தூர் வட்டாரங்களில் நடந்த முகாமுக்கு, சேலம் ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார்.
சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், எம்பி-க்கள் கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி), பார்த்திபன் (சேலம்), எம்எல்ஏ ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, முன்னாள் எம்எல்ஏ சிவலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் வாங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரியை முதல்வர் நியமனம் செய்தார். இதற்காக தற்போது, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கவே முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
கிராம அளவில் புதிய பட்டா கோருதல், கூட்டு பட்டாக்களை மாற்றித் தருதல், கூட்டுறவுத் துறையில் உள்ள குறைகளை தீர்க்கவும், கடன் வேண்டியும், வேலைவாய்ப்பு வேண்டுதல் உள்ளிட்ட மனுக்கள் அதிக அளவில் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீதும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆத்தூரில் நடைபெற்ற முகாமின்போது, மனு வழங்கிய 23 வயதான மாற்றுத் திறனாளி சபரி என்பவருக்கு உடனடியாக நவீன சக்கர நாற்காலியை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். தொடர்ந்து, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, சேலம் தெற்கு ஆகிய வட்டங்களிலும் குறைதீர் முகாம்கள் நடைபெற்றன.
இம்முகாம்களில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) செல்வம், தனி துணை ஆட்சியர் சத்திய பாலகங்காதாரன், வட்டாட்சியர்கள் சுமதி (தலைவாசல்), மாணிக்கம் (ஆத்தூர்) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT