Published : 16 Nov 2021 03:10 AM
Last Updated : 16 Nov 2021 03:10 AM

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நிகழாண்டு - 2,309 விதை மாதிரிகளை பரிசோதித்ததில் 92 தரமற்றவை : திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் தகவல்

பெரம்பலூர்

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில், நிகழாண்டு 2,309 விதை மாதிரிகளை பரிசோதித்ததில், 92 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் மனோன்மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான விதை பரிசோதனை நிலையம், பெரம்பலூர் மாவட்ட மைய நூலகம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில், விவசாயிகள் விதைக்கும் விதைகளின் தரத்தை அறியும் விதமாக முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்த தன்மை மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வறிக்கை வழங்கப்படுகிறது.

அதன்படி, 2021-22-ம் ஆண்டு இந்நிலையத்தின் மூலம் 2,820 விதை மாதிரிகளை பரிசோதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், இதுவரை 2,309 விதை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 92 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு...

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்யும்போது, விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பு செய்வதன் மூலம் நல்ல விளைச்சல் பெறலாம். இதற்காக, தாங்கள் சாகுபடி செய்யவுள்ள விதைநெல் குவியல்களிலிருந்து 100 முதல் 250 கிராம் அளவுள்ள விதைநெல்லை எடுத்து, மூத்த வேளாண்மை அலுவலர், விதை பரிசோதனை நிலையம், மாவட்ட மைய நூலகம் அருகில், துறைமங்கலம், பெரம்பலூர்- 621220 என்ற முகவரிக்கு அனுப்பி, விதைநெல்லை பகுப்பாய்வு செய்துகொள்ளலாம். விதை மாதிரி ஆய்வுக் கட்டணம் ரூ.30. ஆய்வு முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x