Published : 15 Nov 2021 07:12 AM
Last Updated : 15 Nov 2021 07:12 AM
மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து வறண்ட 100 ஏரிகளுக்கு காவிரி நீரைக் கொண்டு செல்லும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 4 ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு கொண்டு செல்ல ரூ.565 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இப்பணிக்காக மேட்டூர் அணையின் இடதுகரை அருகே திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீரேற்று நிலையத்தில் உள்ள பிரம்மாண்டமான மோட்டார்கள் மூலமாக 12 கிமீ தூரம் உள்ள காளிப்பட்டி ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும்.
பின்னர், காளிப்பட்டி ஏரியில் இருந்து அடுத்தடுத்த ஏரிகளுக்கு உபரிநீர் கொண்டு செல்லப்படும். இதற்காக, வெள்ளாளபுரம் ஏரி மற்றும் கண்ணந்தேரி ஏரி ஆகியவற்றில் துணை நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் உபரி நீர் திட்டத்தால், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும்ஓமலூர் ஆகிய வட்டங்களில் சுமார் 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
தற்போது, மேட்டூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து உபரிநீர் திட்டத்துக்கான திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதைத் தொடர்ந்து, நீரேற்று நிலையத்தில் இருந்து காளிப்பட்டி ஏரிக்கு நீரை கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. எனினும், நீரேற்று நிலையத்தில் இருந்து காளிப்பட்டி ஏரிக்கு விநாடிக்கு 35 கனஅடி வீதம் உபரிநீரை கொண்டுசெல்ல சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இன்று (15-ம் தேதி) காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். முதல்கட்டமாக காளிப்பட்டி ஏரி நிரம்பியதும் ராயப்பன் ஏரி, சின்னேரி, மானாத்தாள் ஏரிகளுக்கு அடுத்தடுத்து நீர் சென்றடையும். இதைத்தொடர்ந்து அடுத்துள்ள ஏரிகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் உபரிநீரை கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT