Published : 15 Nov 2021 07:13 AM
Last Updated : 15 Nov 2021 07:13 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் இருந்து 10 ஆயிரம் கன அடிக்கு அதிகமான உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை 3 மணி நிலவரப்படி மருதூர் அணையைத் தாண்டி 13,070 கன அடி தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. அதேநேரத்தில் வைகுண்டம் அணைக்கட்டை தாண்டி 4,317 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்ததால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தாமிரபரணி கரையோரம் உள்ள கலியாவூர், முறப்பநாடு, அகரம், கருங்குளம், வைகுண்டம், ஏரல், ஆத்தூர், முக்காணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளாட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டனர். மக்கள் யாரும் தாமிரபரணி கரையோரம் செல்ல வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.
மேலும், தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் அனைத்து பாதை களையும் வருவாய் துறை, உள் ளாட்சி துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அடைத்தனர். எச்சரிக்கை அறிவிப்புகளையும் வைத்துள்ளனர்.
நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனிமொழி எம்.பி. ஆய்வு
கரையோர பகுதிகளில் செய்யப் பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருதூர் அணைக்கட்டு பகுதியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தாமிரபரணி ஆற்றில் மழைக் காலங்களில் கடலுக்கு வீணாக செல்லும் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலம் முடிந்ததும் நீர்வரத்து கால்வாய் உள்ளிட்டவைகளை சீரமைத்து தண்ணீரை தேக்கி வைக்க தேவையான நடவடிக்கை நிச்சயம் செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT