Published : 10 Nov 2021 03:07 AM
Last Updated : 10 Nov 2021 03:07 AM
மழை வெள்ளத்தால் ஏற்படும் பயிர் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் தொடர்பாக காடையாம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவ மழைக் காலம் என்பதால் விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் அதிகப்படியாக தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழை வெள்ளத்தில் பயிர்கள் பாதிப்படையும் பட்சத்தில், மேலுரமாக தழை மற்றும் சாம்பல் சத்து உரங்கள் 25 சதவீதம் கூடுதலாக பயன்படுத்த வேண்டும். தழை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு காணப்பட்டால் இலைவழி ஊட்டம் அளிக்க வேண்டும்.
அதிகப்படியாக வெளியேறும் நீரை, உரிய வழிமுறைகளில் சேகரித்து பருவமழைக்குப் பின்னர் நீரை நுண்ணீர் பாசன கருவிகள் மூலம் சிக்கனமாக பயன்படுத்தவும், பூச்சி மற்றும் நோய்களின் தாக்கத்தை கூர்ந்து கவனித்து உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நீரில் மூழ்கிய நெற்பயிரில் ஊட்டச் சத்து குறைபாடு தென்பட வாய்ப்புள்ளது. இதை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா மற்றும் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்து, வயலில் தண்ணீர் வடிந்தவுடன் இடவேண்டும்.
தென்னை தோட்டங்களில் முதிர்ந்த, முதிராத தேங்காய்களை புயல் தொடங்குவதற்கு முன்னர் அறுவடை செய்ய வேண்டும். கீழ்சுற்றில் உள்ள கனமான ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக தவிர்க்கவேண்டும். தென்னை மரங்களை காப்பீடு செய்து, பாதிப்படையும் பட்சத்தில் உரிய இழப்பீடு பெற்றிடலாம்.
வெள்ளத்தினால் ஏற்படும் பயிர் பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பாக கூடுதல் தகவல் அறிய வட்டார உதவி வேளாண் அலுவலர்களை காடையாம்பட்டி 88385 14410, டேனிஷ்பேட்டை 89037 28938, தீவட்டிப்பட்டி 94433 63299, செம்மாண்டப்பட்டி 99447 40750, பூசாரிப்பட்டி மற்றும் சின்னதிருப்பதி 96593 73468 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT