Published : 06 Nov 2021 03:06 AM
Last Updated : 06 Nov 2021 03:06 AM
ஆசனூர் அருகே பழுதடைந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ஓட்டுநர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து மர பாரம் ஏற்றிய லாரி, ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு பகுதியில் வந்தபோது, மண்ணில் சக்கரம் புதைந்ததால் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (28), லாரி உரிமையாளருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, லாரி உரிமையாளர் மூன்று பேருடன் வந்து லாரியை சேற்றில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, லாரியின் பாரத்தைக் குறைக்கும் வகையில், ஓட்டுநர் மஞ்சுநாதன் லாரி மீது ஏறி மரக்கட்டைகளை இறக்க முயன்றார்.
அப்போது சாலையோரம் இருந்த மின்சார கம்பி மீது மஞ்சுநாதன் கை பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சுநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆசனூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT