Published : 06 Nov 2021 03:07 AM
Last Updated : 06 Nov 2021 03:07 AM
தடப்பள்ளி - அரக்கன்கோட்டையில் புதிய நெல் ரகத்தின் மூலம், ஏக்கருக்கு 4 டன்னுக்கு மேலாக விளைச்சல் கிடைத்துள்ளது, என ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில், இரண்டாம் போக சாகுபடிக்கு அக்டோபர் 15-ம் தேதி நீர் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கான உழவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோபி வட்டாரத்தில் 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பில், இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக நாற்றுவிடும் பணி தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே முதல் போக சாகுபடியில், நவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடித்த விவசாயிகள், ஒரு ஏக்கரில் 4 டன்னுக்கு அதிகமாக மகசூல் எடுத்துள்ளனர்.
கீழ் பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிகளில், நடவு வேலைகளுக்கான ஆள் பற்றாக்குறையை போக்கிட இயந்திரம் மூலம் நடவு செய்வது அதிகரித்து வருகிறது. பல இடங்களில் இயந்திர நடவுக்காக பாய் நாற்றங்கால் முறையில், பிளாஸ்டிக் தட்டுகளில் நாற்று விடப்பட்டு நடவுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில், அளுக்குளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரது வயலில் இயந்திர நடவுமுறைக்கான நாற்றங்கால் வயலை ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:
‘சம்பாசப் - 1 என்ற நெல் ரகம் இப்பருவத்திற்கு ஏற்றதாக உள்ளது. மேலும் டீலக்ஸ் பொன்னி எனப்படும் பி.பி.டி -5204 என்ற ரகத்திற்கு மாற்றாகவும், இதைவிட நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைவாகவும், அதிக மகசூல் தரக் கூடியதாகவும் உள்ளதால், பெரும்பாலான உழவர்கள் சம்பாசப்-1 என்ற ரகத்தினை அதிகளவு சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர். கடந்த போகத்தில் விவசாயிகள் இந்த ரகத்தினை பயிரிட்டு ஏக்கருக்கு 4160 கிலோ வரை, மகசூல் எடுத்து சாதனை செய்துள்ளனர்.
செம்மை நெல் சாகுபடி எனப்படும் ஒற்றை நாற்று முறை மூலம் நடவு செய்வதால், நீர் நிர்வாகம், களைகட்டுப்பாடு செய்தல், உரமிடுதல் போன்றவற்றை எளிதாக கையாள முடியும். மேலும் இளம் நாற்றுகளை இம்முறையில் நடவு செய்வதால், அதிக தூர்கட்டுகளும் மணிகளும் பிடித்திட ஏதுவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) அ.நே.ஆசைத்தம்பி மற்றும் கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதயாளன், வேளாண்மை அலுவலர் சிவப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT