Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM

தென்காசி மாவட்ட பாசனத்துக்கு 4 அணைகளில் தண்ணீர் திறப்பு : 32,024 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

ராமநதி அணையில் இருந்து ஞானதிரவியம் எம்.பி., ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உள்ளிட்டோர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்து மலர்களைத் தூவினர்.

தென்காசி

தென்காசி மாவட்டம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, இந்த அணைகளில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. ராமநதி அணையில் இருந்து ஆட்சியர் கோபால சுந்தரராஜ் முன்னிலையில், திருநெல்வேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் தண்ணீர் திறந்துவைத்தார். எம்எல்ஏக்கள் பழனி, ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி, ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யா, கடையம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் மகேஷ் மாயவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர்கள் முருகேசன், ஆனந்த், கிருஷ்ணமுர்த்தி, அந்தோணிராஜ், பேட்டர்ஷன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவைத்தனர்.

மார்ச் 30-ம் தேதி வரை 158 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 125 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 3,987 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், 5,935 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெறும். ராமநதி அணையில் இருந்து விநாடிக்கு 60 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 1,527 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், 3,416 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெறும்.

கருப்பாநதி அணையில் இருந்து விநாடிக்கு 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 1,551 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், 7,962 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெறும். அடவிநயினார் அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2,147 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனமும், 5495 ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசனமும் பெறும். 4 அணைகள் மூலமும் மொத்தம் 32,024 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தென்காசி மாவட்டத்தில் 171 குளங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 59 குளங்கள் என மொத்தம் 230 குளங்களுக்கு நீராதாரம் கிடைக்கும்.

விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் விநியோக பணியில் பொதுப்பணித் துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x