Published : 03 Nov 2021 03:09 AM
Last Updated : 03 Nov 2021 03:09 AM
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசை கண்டறிய சேலத்தில் 3 இடங்களில் அளவீட்டு மானிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு சேலம் மாநகரில் 145 தற்காலிக பட்டாசு கடைகளுக்கும், மாவட்டத்தின் இதர பகுதிகளில் 254 பட்டாசு கடைகளுக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசு ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க அரசு நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டாசு வெடிப்பவர்களைக் கண்காணிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் மாநகரில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை கண்டறிய மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சேலம் மாநகரில் தீபாவளியை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை கண்டறிய சேலம் 4 ரோடு, ராமகிருஷ்ணா பார்க் ஆகிய இரு இடங்களில் தற்காலிகமாக அளவீட்டு மானிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் நிரந்தரமாக அளவீட்டு மானி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 இடங்களில் பொருத்தப் பட்டுள்ள அளவீட்டு மானிகளைக் கொண்டு, காற்றில் அதிகரிக்கும் சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்டவைகளில் மாசு, ஒலி மாசு ஆகியவை கடந்த 28-ம் தேதி தொடங்கி வரும் 11-ம் தேதி வரை தொடர்ந்து மாசு அளவு சேகரிக்கப்படும். அதன் பின்னர் மாசு மாறுபாடு தொடர்பான விவரம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT