Published : 02 Nov 2021 03:11 AM
Last Updated : 02 Nov 2021 03:11 AM
தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் விதமாக, வடிகால்களை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியதை அடுத்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கரில் சம்பா நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் இளம் பயிராக இருப்பதால், வயலில் தேங்கியுள்ள மழைநீரில் மூழ்கி அழுகி சேதமாகும் என்பதால் வடிகால்களை கண்டறிந்து அதை சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அண்மையில் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொதுப்பணித் துறையினர் ஆங்காங்கே வாய்க்கால்கள், வடிகால்களில் தண்ணீர் சீராக செல்ல தடையாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர் அருகே திட்டை வடிகால் வாய்க்காலில் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெங்காய தாமரைகள் உள்ளிட்ட செடி, கொடிகள் படர்ந்து வாய்க்காலில் மழைநீர் வடியவிடாமல் இருந்ததை கண்டறிந்து, நேற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல, பாபாநாசம் அருகே எடவாக்குடி பகுதியில் உள்ள புத்தார் வடிகால் வாய்க்காலையும், பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளர் பூங்கொடி தலைமையில் பணியாளர்கள் சீரமைத்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீரை வடியவைக்கும் பணியும், வடிகால்களை சீரமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT